டெல்லி முதல்-மந்திரி அதிஷி போலி வழக்கில் கைது செய்யப்படலாம்: அரவிந்த் கெஜ்ரிவால்
|டெல்லி முதல்-மந்திரி அதிஷி போலி வழக்கில் கைது செய்யப்படலாம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரி அதிஷியுடன், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜகவின் உத்தரவின் பேரில் மத்திய புலனாய்வு அமைப்புகளால் டெல்லி முதல்-மந்திரி அதிஷி போலி வழக்கில் கைது செய்யப்படலாம் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது,
"ஆதாரப்பூர்வமான தகவலின்படி, சமீபத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறைகளுக்கு இடையே சந்திப்பு நடந்துள்ளது. இதில், முதல்-மந்திரி அதிஷியை ஏதாவது போலியான வழக்கில் கைது செய்யும் படி பாஜக உத்தரவிட்டுள்ளது என்று எங்களுக்கு தெரியவந்துள்ளது. டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சியை திசை திருப்ப முயற்சிக்கிறது. போக்குவரத்துத்துறையில் அதிஷி மீது அவர்கள் ஒரு போலி வழக்கை தயாரிக்கிறார்கள். பெண்களுக்கு இலவச பஸ் பயணத் திட்டத்தை நிறுத்த விரும்புகிறார்கள். நான் உயிருடன் இருக்கும் வரை பெண்களுக்கான இலவச பஸ் பயணத் திட்டத்தை நிறுத்த விடமாட்டேன்." இவ்வாறு அவர் கூறினார்.