தேசிய செய்திகள்
டெல்லி: 3 ஐ.ஏ.எஸ். பயிற்சி மாணவர்கள் பலி; நீதி கோரி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி
தேசிய செய்திகள்

டெல்லி: 3 ஐ.ஏ.எஸ். பயிற்சி மாணவர்கள் பலி; நீதி கோரி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

தினத்தந்தி
|
28 July 2024 11:35 PM IST

டெல்லியில் 3 ஐ.ஏ.எஸ். பயிற்சி மாணவர்கள் பலியான சம்பவத்துடன் தொடர்புடைய பயிற்சி மைய உரிமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் இருவரையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் சூழலில், பழைய ராஜீந்தர் நகர் பகுதியில் தரை தளத்திற்கு கீழே அடித்தளத்தில், ஐ.ஏ.எஸ். படிப்பவர்களுக்காக செயல்பட்டு வந்த பயிற்சி மையத்திற்குள் நேற்று வெள்ள நீர் புகுந்துள்ளது.

இதில், மாணவ மாணவிகள் சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் திணறினர். இதுபற்றி டெல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. உள்ளூர் போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் உடனடியாக மீட்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டதில் 3 மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்த அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

இதுபற்றி தகவல் அறிந்ததும், டெல்லி மேயர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் சம்பவ பகுதிக்கு சென்றனர். இதனை டெல்லி மந்திரி அதிஷி, எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி மாஜிஸ்திரேட் அளவிலான விசாரணை மேற்கொள்ளும்படி தலைமை செயலாளருக்கு உத்தரவிட்ட அவர் அதுபற்றி 24 மணிநேரத்திற்குள் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படியும் கேட்டு கொண்டார்.

இந்த சம்பவத்திற்கு பொறுப்பான நபர்கள் ஒருவரும் தப்ப முடியாது என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்து உள்ளார். வெள்ளம் புகுந்தபோது, பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் 30 மாணவர்கள் வரை இருந்துள்ளனர். 3 பேர் சிக்கி கொண்டனர். மற்றவர்கள் தப்பி விட்டனர் என தீயணைப்பு துறை அதிகாரி அதுல் கார்க் கூறினார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த 3 பேரும் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்கள், உத்தர பிரதேசத்தின் அம்பேத்கார் மாவட்டத்தில் வசித்து வந்த ஸ்ரேயா யாதவ், தெலுங்கானாவை சேர்ந்த தன்யா சோனி மற்றும் கேரளாவின் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த நிவின் தல்வின் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் மாணவர்கள் இன்றிரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், அலட்சியத்துடன் செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

இதுபற்றி ஐ.ஏ.எஸ். பயிற்சி பெறுபவரான அமன் குமார் யாதவ் கூறும்போது, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை அதிகாரிகள் வெளியிட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மாணவர்கள் விரும்புகின்றனர். அதனை மறைக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரணம் கிடைக்க வேண்டும் என கூறினார்.

இதேபோன்று, தரை தளத்திற்கு கீழே நூலகங்களோ அல்லது குடியிருப்பு வளாகங்களோ வைத்திருக்கும் நில உரிமையாளர்கள் மற்றும் அனைத்து பயிற்சி மையங்களின் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் மாணவர்கள் விரும்புகின்றனர் என்றார்.

அதிக வாடகைகளை வசூலித்து விட்டு, பராமரிப்பற்ற கட்டிடங்களை வைத்து இருக்கின்றனர் என்றும் குற்றச்சாட்டாக கூறினார். இந்த சம்பவத்திற்கு டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா, ஆம் ஆத்மி எம்.பி. சுவாதி மாலிவால், டெல்லி பா.ஜ.க. தலைவர் விரேந்திரா சச்தேவா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பயிற்சி மைய உரிமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் இருவரையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்