டெல்லி: 13 பயிற்சி மையங்களுக்கு சீல்; சட்டவிரோத பயிற்சி மையங்கள் தப்ப முடியாது - மேயர் உறுதி
|டெல்லியில் பயிற்சி மையத்தில் 3 மாணவ மாணவிகள் பலியான சம்பவத்தின் தொடர்ச்சியாக, ராஜீந்தர் நகரில் நடந்த சோதனையில், 13 பயிற்சி மையங்கள் சீல் வைக்கப்பட்டன.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த 27-ந்தேதி, பரவலாக பெய்த கனமழையால், பழைய ராஜீந்தர் நகர் பகுதியில் தரை தளத்திற்கு கீழே அடித்தளத்தில், ஐ.ஏ.எஸ். படிப்பவர்களுக்காக செயல்பட்டு வந்த பயிற்சி மையத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. 30 பேர் வரை படித்து வந்த அந்த மையத்தில் வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில் 2 பேர் மாணவிகள். ஒருவர் மாணவர் ஆவார். அவர்கள், உத்தர பிரதேசத்தின் அம்பேத்கார் மாவட்டத்தில் வசித்து வந்த ஸ்ரேயா யாதவ், தெலுங்கானாவை சேர்ந்த தன்யா சோனி மற்றும் கேரளாவின் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த நிவின் தல்வின் என தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா, ஆம் ஆத்மி எம்.பி. சுவாதி மாலிவால், டெல்லி பா.ஜ.க. தலைவர் விரேந்திரா சச்தேவா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை இரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்று, போராட்டத்தில் ஈடுபட்டனர். அலட்சியத்துடன் செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பயிற்சி மைய உரிமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் இருவரையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதுபற்றி டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் கூறும்போது, 3 மாணவர்கள், அவர்கள் பயிற்சி பெற்ற மையத்தின் அடித்தளத்தில் மழைநீர் புகுந்ததில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும், உடனடியாக அந்த பகுதிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தேன்.
டெல்லி மாநகராட்சி ஆணையாளருக்கு கடிதம் எழுதி, டெல்லி மாநகராட்சியின் விதிகளை பின்பற்றாத அல்லது டெல்லியில் சட்டவிரோத வகையில் செயல்பட்டு வரும் அனைத்து மையங்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டு உள்ளேன் என கூறியுள்ளார்.
ராஜீந்தர் நகரில் டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்ததில், 13 பயிற்சி மையங்கள் சீல் வைக்கப்பட்டன. இதன்பின் மற்றொரு சோதனையில், 6 பயிற்சி மையங்கள் சீல் வைக்கப்பட்டன. முகர்ஜி நகர் பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டது.
இளநிலை பொறியாளர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். உதவி பொறியாளர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.