
சமூகத்துக்கு இவங்க என்ன சொல்ல வர்றாங்க..? அலகாபாத் நீதிபதியின் தீர்ப்பை விமர்சித்த பெண் எம்.பி.

பாலியல் வழக்கு தொடர்பாக நீதிபதி வழங்கிய தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமதமின்றி தலையிட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்வாதி மாலிவால் கேட்டுக்கொண்டார்.
புதுடெல்லி:
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் வன்கொடுமைக்கான முயற்சியின் கீழ் வராது என்று அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் 11 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி, இந்த கருத்தை கூறினார். அதாவது, 'சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்துவதும் அவரின் பைஜாமா கயிற்றை அவிழ்த்து அவரை இழுப்பதும் பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வராது' என்று நீதிபதி கூறியதுடன், குற்றம்சாட்டப்பட்டவர்களின் மீது பதியப்பட்ட வழக்கின் பிரிவுகளை மாற்றியமைத்தார்.
அத்தகைய குற்றமானது, பெண்ணின் ஆடைகளை இழுத்து தாக்குதல் அல்லது நிர்வாணமாக்கும் நோக்கத்துடன் தாக்குதல் என்ற வரம்பிற்குள் வருவதாக அவர் கூறியிருந்தார். இந்த தீர்ப்பு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி மாநிலங்களவை பெண் உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் கூறியதாவது:-
இது மிகவும் வெட்கக்கேடானது, முற்றிலும் தவறானது. அவர்கள் (நீதிபதி) சமூகத்திற்கு என்ன செய்தியை கொடுக்க விரும்புகிறார்கள்? ஒரு சிறுமி இதுபோன்ற கொடூரமான தாக்குதலுக்கு ஆளாக நேரிட்டாலும், அது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படாதா? இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தாமதமின்றி தலையிட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.