< Back
தேசிய செய்திகள்
வங்கி கடனை அடைக்க முடியாததால் விபரீதம்... கள்ளக்காதலி வீட்டில் தற்கொலை செய்த தணிக்கை அதிகாரி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

வங்கி கடனை அடைக்க முடியாததால் விபரீதம்... கள்ளக்காதலி வீட்டில் தற்கொலை செய்த தணிக்கை அதிகாரி

தினத்தந்தி
|
17 July 2024 2:02 PM IST

கள்ளக்காதலி வீட்டில் மாநகராட்சி தணிக்கை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளறடை பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி (வயது43). இவர் திருவனந்தபுரம் மாநகராட்சியில் கணக்கு தணிக்கை அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவருடைய மனைவி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஷாஜி தினமும் வேலைக்கு செல்லும்போது மனைவியை அழைத்துச் சென்று, மாலையில் பள்ளி முடிந்ததும் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் 2 பேரும் பணிக்கு சென்றனர். மாலையில் பள்ளி முடிந்ததும் ஷாஜியை அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. அதன்பிறகு இரவு நீண்ட நேரமாகியும் ஷாஜி வீட்டுக்கு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது மனைவி உறவினர்களுடன் வெள்ளறடை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜியை தேடிவந்தனர். இந்த நிலையில் ஷாஜியின் கார் ஆனப்பாறை என்ற இடத்தில் நிற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஷாஜிக்கு அந்த பகுதியில் ஒரு கள்ளக்காதலி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது, ஷாஜி ஒரு அறையில் தூக்குப்போட்டு இறந்த நிலையில் கிடந்தார். அதைதொடர்ந்து தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ஷாஜி தூக்குப்போட்டு தற்கொலை செய்த வீடு அவரது கள்ளக்காதலி வீடு என்பதும், பல வங்கிகளில் இருந்து அவர் கள்ளக்காதலிக்கு கடன் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால், கள்ளக்காதலி அந்த கடனை திருப்பி செலுத்தவில்லை. இதையடுத்து கடனை திருப்பி செலுத்தாததால், வங்கிகளில் இருந்து ஷாஜிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த ஷாஜி, கள்ளக்காதலியின் வீட்டுக்கு சென்று அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். ஆனால், ஷாஜியின் உடலை போலீசார் கைப்பற்றியபோது அந்த வீட்டில் ஆட்கள் யாரும் இல்லை. இந்த சம்பவம் குறித்து வெள்ளறடை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளக்காதலிக்கு வங்கியில் வாங்கி கொடுத்த கடனை திருப்பி செலுத்தாததால் மாநகராட்சி தணிக்கை அதிகாரி தற்கொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்