< Back
தேசிய செய்திகள்
ரூ.5 கோடி கேட்டு நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்
தேசிய செய்திகள்

ரூ.5 கோடி கேட்டு நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்

தினத்தந்தி
|
18 Oct 2024 9:29 PM IST

ரூ.5 கோடி கேட்டு நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் கடந்த சனிக்கிழமை பாந்திராவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் இதுவரை 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாபா சித்திக் கொலைக்கு தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்று உள்ளது. பாபா சித்திக் கொலை சம்பவத்தை அடுத்து நடிகர் சல்மான்கானின் பாதுகாப்பை போலீசார் அதிகரித்து உள்ளனர். சல்மான்கானுக்கு நீண்டகாலமாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மிரட்டல் விடுத்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பாந்திராவில் உள்ள சல்மான் கானின் வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி இருந்தது.

இந்தநிலையில் ரூ.5 கோடி கேட்டு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளது. இதுதொடர்பாக மும்பை போக்குவரத்து போலீசார் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த மிரட்டலில், " இதை சாதாரணமாக எடுத்து கொள்ள வேண்டாம். சல்மான்கான் உயிருடன் இருக்க விரும்பினால் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர விரும்பினால், அவர் ரூ.5கோடி தர வேண்டும். அவர் பணம் கொடுக்கவில்லை எனில், பாபா சித்திக்கை விட மோசமான நிலையை சந்திக்க நேரிடும். " என கூறப்பட்டுள்ளது. கொலை மிரட்டலை அடுத்து பாந்திராவில் உள்ள சல்மான்கான் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் சல்மான்கானுக்கு மிரட்டல் எங்கு இருந்து வந்தது, அதன் உண்மை தன்மை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்