டெல்லியில் விதிகளை மீறிய 13 பயிற்சி மையங்களுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை
|டெல்லி கரோல் பாக் பகுதியில் சட்ட விரோதமாக அடித்தளத்தில் இயங்கி வந்த பயிற்சி மையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. பழைய ராஜிந்தர்நகர் பகுதியில் மழை வெளுத்து வாங்கியதில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அங்கு ஒரு கட்டிடத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சிவில் சர்வீசஸ் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. அதன் அடித்தளத்தில் வெள்ளம் புகுந்து விட்டது.
அப்போது அங்கிருந்த பயிற்சி மாணவர்கள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு மாணவர், 2 மாணவிகள் பலியானார்கள். இந்த சம்பவம் பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, ராஜிந்தர் நகர் போலீஸ் நிலையத்தில், பயிற்சி மைய உரிமையாளர் அபிஷேக் குப்தா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாரதீய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ், மரணம் விளைவிக்கும் குற்றம் இழைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, பயிற்சி மைய உரிமையாளர் அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, விதிகளை மீறி இயங்கி வரும் பயிற்சி மையங்கள் மீது டெல்லி மாநகராட்சி தனது நடவடிக்கையை தொடங்கி உள்ளது. அடித்தளத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் பயிற்சி மையங்கள் அடையாளம் காணப்பட்டு விட்டதாகவும், அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறினர். இதன்படி, நேற்று இரவு 13 பயிற்சி மையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பல்வேறு பயிற்சி மையங்களில் ஆய்வு தொடர்ந்து நீடித்து வருகிறது.