அரியானா: சிலிண்டர் வெடித்து 4 பேர் உயிரிழப்பு
|அரியானாவில் சிலிண்டர் வெடித்து, பக்கத்து வீட்டு பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
பரிதாபாத்,
அரியானா மாநிலம் பரிதாபாத் அருகே உள்ள பக்ரி கிராமத்தைச் சேர்ந்தவர் சர்ஜீத். இவர் நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் அவர்கள் தூங்கினர்.
அதிகாலை 2.15 மணி அளவில் கேஸ் கசிந்து வீட்டில் தீப்பிடித்து உள்ளது. பின்னர் சிலிண்டர் வெடித்து சிதறியதால் வீடே அதிர்ந்தது. அதிர்ச்சியில் கூரை இடிந்து விழுந்ததில் அதன் அடியில் சர்ஜீத், அவரது மனைவி பபிதா மற்றும் பேரன் நகுல் ஆகியோர் சிக்கிக்கொண்டனர்.மேலும் பக்கத்துவீட்டில் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த லட்சுமி மற்றும் அவரது மகன் மீதும் இடிபாடுகள் விழுந்தன.
சத்தம் கேட்டு எழுந்த, அக்கம்பக்கத்து வீட்டினர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டபோது, சர்ஜீத், பபிதா மற்றும் நகுல் ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். பக்கத்து வீட்டை சேர்ந்த லட்சுமியும், அவரது மகனும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.