டானா புயல்: மேற்கு வங்காளத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
|டானா புயலால் மேற்கு வங்காளத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொல்கத்தா,
வங்கக்கடலில் கடந்த 21 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, 23ம் தேதி புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'டானா' என்று பெயரிடப்பட்டது. டானா புயல், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று முன் தினம் காலை தீவிர புயலாகவும் உருவெடுத்தது. இந்த புயல் தீவிர புயலாக வடக்கு ஒடிசா - மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.
டானா புயலால் மேற்கு வங்காளத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள மின் கம்பியை தொட்டத்தில் சந்தன் தாஸ்(31) என்ற குடிமை தன்னார்வலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் போலீஸ் குழுவுடன் வெளியே சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஹவுரா முனிசிபல் கார்ப்பரேஷனின் ஊழியர் ஒருவர் தண்டிப்பாராவில் தண்ணீர் தேங்கிய சாலையில் இறந்து கிடந்தார். நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மேற்கு வங்காள மாநிலத்தில் நேற்று மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பதர்பிரதிமாவில் ஒருவரும், மற்றொருவர் தெற்கு கொல்கத்தாவின் பபானிபூர் பகுதியில் உயிரிழந்தாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.