< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

ஒடிசா, மேற்கு வங்காளத்தில் தீவிரமடையும் 'டானா' புயல்

தினத்தந்தி
|
24 Oct 2024 8:42 PM IST

'டானா' புயல் கரையை கடக்க உள்ள நிலையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொல்கத்தா,

வங்கக் கடலில் உருவான 'டானா' புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று நள்ளிரவு அல்லது நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் 'டானா' புயலால் பாதிக்கப்படும் இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

'டானா' புயல், பிதர்கனிகா தேசிய பூங்கா மற்றும் தாம்ரா துறைமுகத்துக்கு இடையே கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது மேற்கு வங்காள மாநிலத்தின் மேற்கு பகுதிகள் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'டானா' புயல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், புயல் கரையைக் கடக்கும்போது காற்று மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் வீசும் எனவும், இன்று இரவு முதல் நாளை காலை வரை கனமழை, காற்று மற்றும் இடி, மின்னல் அதிகம் இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒடிசாவின் மயூர்பஞ்ச், கேந்திரபாரா, பாலசோர், பத்ரக், ஜாஜ்பூர், கட்டாக் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பூரி, கோர்தா, நாயகர், தேன்கனல், கியோஞ்சர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், சுந்தர்கர், தியோகர், அங்குல், பௌத், கந்தமால், கஞ்சம், ஜார்சுகுடா மற்றும் சம்பல்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

'டானா' புயலின் பாதிப்பினை எதிர்கொள்ளும் வகையில், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ராணுவம், கப்பற்படை மற்றும் கடலோர காவல் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தா, ஹவுரா, ஹூக்ளி மற்றும் 24 பர்கானாஸ் ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. தொடர்ந்து மழைப்பொழிவு மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா துறைமுக அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை(வெள்ளிக்கிழமை) மாலை வரை கப்பல் போக்குவரத்துகளை நிறுத்தி வைத்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 9 மணி வரை நிறுத்தப்பட்டுள்ளது.

'டானா' புயல் காரணமாக 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை திட்டமிடப்பட்ட 170-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களின் சேவையை தென்கிழக்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது. அதே போல் நாளை காலை வரை ஹவுரா பிரிவில் 68 புறநகர் ரெயில்களை கிழக்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.

வடமேற்கு வங்கக் கடலில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், அரசின் எச்சரிக்கையையும் மீறி கடல் அலைகள் கடற்கரையில் மோதுவதை ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள் சிலர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இந்த நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் இருந்து இதுவரை 2.43 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மீன்பிடிப்பதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் தலைமைச் செயலகத்தில் இருந்து நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்த அவர், புயல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், அவசர உதவிக்கு 22143526 என்ற மாநில அரசின் உதவி எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஒடிசா கடல் பகுதியை டானா புயல் நெருங்கியதால் பாரதீப் பகுதி, கேந்திரபாரா மாவட்டத்தின் ராஜ்நகர், பாலசூர், புரி ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுக்கு பல மரங்கள் சாய்ந்தன. குறிப்பாக, ஒடிசா கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்தப் புயல் கரையை கடக்கும்போது பத்ரக், பாலசூர், ஜஜ்பூர், கட்டாக், குர்தா, ஜகத்சிங்பூர், கேந்திரபடா மற்றும் புரி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

புயல் கரை கடந்தபின் மேற்கு மற்றும் தென் பகுதி நோக்கி திரும்பும் வாய்ப்புள்ளதால் தெற்கு ஒடிசா பகுதியில் சனிக்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் கூறுகையில்,

'டானா புயல் காரணமாக ஒடிசாவின் 3 கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும் வாய்ப்புள்ளது. 14 மாவட்டங்களில் இருந்து 10 லட்சம் பேரை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளோம். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. டானா புயலை எதிர்கொள் ஒடிசா அரசு தயார் நிலையில் உள்ளது.

புயல் பாதிப்பை சமாளிக்க மாநில மந்திரிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றார். இதனிடையே, ஒடிசாவின் பூரியில் உள்ள 12-ம் நூற்றாண்டு ஜெகன்நாதர் கோவிலை டானா புயல் பாதிப்பில் இருந்து பாதுகாக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் செய்திகள்