புயல் பாதிப்பு: தமிழ்நாட்டில் நிவாரண உதவிகளை மேற்கொள்ள தொண்டர்களுக்கு உத்தரவிட்ட ராகுல் காந்தி
|பெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கண்டு மனமுடைந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
வங்கக்கடலில் உருவான 'பெஞ்சல்' புயல், கடந்த 30-ந்தேதி புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடைப்பட்ட பகுதியை மையமாக கொண்டு, புதுச்சேரி அருகே கரையை கடக்க தொடங்கியது. அப்போது, 'பெஞ்சல்' புயலால் புதுச்சேரியிலும், விழுப்புரம் மாவட்டத்திலும் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று காலை நிறைவு பெற்ற 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் கெடாரில் 42 செ.மீட்டர், சூரப்பட்டு பகுதியில் 38 செ.மீட்டர், தர்மபுரி மாவட்டம் அரூரில் 33 செ.மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று காலை வலுக்குறைந்தது வடதமிழக உள் பகுதிகளில் நிலவியது. இந்த தாழ்வு பகுதியானது, இன்று தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாகவும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நிவாரண உதவிகளை மேற்கொள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
பெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கண்டு மனமுடைந்தேன். புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். தங்களின் உடைமைகளை இழந்தவர்களுக்கு ஆறுதல்களை தெரிவித்து கொள்கிறேன்.
மாநிலத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும், முடிந்தவரை நிவாரணப் பணிகளில் நிர்வாகத்திற்கு உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.