< Back
தேசிய செய்திகள்
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் முகேஷ் ஜாமீனில் விடுவிப்பு

File image

தேசிய செய்திகள்

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் முகேஷ் ஜாமீனில் விடுவிப்பு

தினத்தந்தி
|
22 Oct 2024 12:47 PM IST

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவால் நேற்று முறைப்படி கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வும், நடிகருமான முகேஷ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கொச்சி,

கேரள திரைத்துறையில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழு தாக்கல் செய்த அறிக்கையை மாநில அரசு கடந்த ஆகஸ்டில் வெளியிட்டது. இதில், நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹேமா கமிஷனின் அறிக்கையை தொடர்ந்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் கலைக்கப்பட்டது. அதன் தலைவர் மோகன் லால் மற்றும் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதனிடையே, ஹேமா கமிஷன் மற்றும் ஏற்கனவே பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 4 நடிகர்கள் மீது பாலியல் வன்கொடுமை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெண் நடிகை அளித்த புகாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.எல்.ஏ.வும், முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாலியல் வன்கொடுமை வழக்கில் முகேஷை சிறப்பு புலனாய்வு குழு நேற்று முறைப்படி கைது செய்தனர். இவர் கைது செய்யப்பட்டதை அவரது வழக்கறிஞர் உறுதிப்படுத்தியிருந்தார். கைதுக்கு பிறகு அவருக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆற்றல் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதுபற்றி அவருடைய வழக்கறிஞர் கூறும்போது, கேரளாவின் எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் கோர்ட்டு முகேஷுக்கு, கடந்த செப்டம்பர் 24-ந்தேதி, நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. முகேஷ் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகளிலும் அவர் முன்ஜாமீன் பெற்றுள்ளார் என கூறினார்.

மேலும் செய்திகள்