ஓடிக்கொண்டிருந்தபோதே 2 துண்டாக பிரிந்த எக்ஸ்பிரஸ் ரெயில்: பயணிகள் அதிர்ச்சி
|பீகாரில் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று இரண்டு பாதியாக பிரிந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாட்னா,
பீகார் அருகே தண்டவாளத்தில் ஓடிக்கொண்டிருந்தபோதே ரெயிலின் 13 மற்றும் 14வது பெட்டியில் இருந்த இணைப்பு இரு பாதியாக பிரிந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுடெல்லியில் இருந்து இஸ்லாம்பூருக்கு மக்த் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளோடு சென்றுகொண்டிருந்தது. ரெயிலானது பீகார் மாநிலத்தின் பக்சர் மாவட்டத்தில் உள்ள டுவினிகஞ்ச் - ரகுநாத்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது காலை 11.08 மணி அளவில் ரெயிலின் ஒரு பாதி அப்படியே பிரிந்தது. இதனால் உள்ளே இருந்த பயணிகள் திடீரென அதிர்ச்சிக்குள்ளாகினர்.
தண்டவாளத்தில் இரண்டு பெட்டிகள் பாதியாக நின்றுகொண்டிருந்தது. இதனால் பயணிகள் சிலர் ரெயில் விபத்தில் சிக்கியதை பார்த்து அச்சத்தில் கத்தி கூச்சலிட்டனர். இதையடுத்து லோகோ பைலட்டும் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் சிலர் தண்டவாளத்தில் இறங்கி நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் பிரிந்து சென்ற 2 பெட்டிகள் இணைக்கப்பட்டு மதியம் 2:25 மணிக்கு மீண்டும் இயக்கப்பட்டது. ரெயில் மீண்டும் புறப்பட்டதை எண்ணி பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த விபத்து குறித்து கிழக்கு மத்திய ரெயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (சிபிஆர்ஓ) சஸ்வதி சந்திரா கூறுகையில்,
டெல்லியில் இருந்து இஸ்லாம்பூருக்குச் சென்ற மகத் எக்ஸ்பிரஸ் ( வண்டி எண் - 20802) ரெயிலின் இணைப்பு உடைந்து இரண்டாக பிரிந்தது. பீகார் மாநிலத்தின் பக்சர் மாவட்டம், டுவினிகஞ்ச் - ரகுநாத்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து நடந்துள்ளது. ரெயிலின் 13வது பெட்டி எஸ் - 7 மற்றும் 14 வது பெட்டியான எஸ் - 6க்கும் இடையே இருந்த இணைப்பு உடைந்தது. விபத்து பற்றி தகவல் அறிந்தது உடனடியாக மீட்பு குழு மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் ரெயில் பெட்டியினை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து எப்படி நடந்தது? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்றார். ரெயில் விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் 3 மணி நேரத்திற்கு மேலாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழித்தடத்தில் இயங்கும் ரெயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டன.