தொடர் வன்முறை... மணிப்பூரின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு
|மணிப்பூரில் டிரோன்கள் மூலமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இம்பால்,
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து நடந்து வரும் மெய்தி இனத்தினருக்கும் குக்கி இனத்தினருக்கும் இடையிலான தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது டிரோன்கள் மூலமாக வெடிகுண்டுகள் வீசப்பட்டும் தாக்குதல் நடக்கிறது.
இதையடுத்து டிரோன் தாக்குதல்களை முறியடிக்க முன்னெச்சரிக்கையாக, அசாம் ரைபிள்ஸ் படையினர் டிரோன்-எதிர்ப்பு அமைப்புகளை மணிப்பூரில் நிறுவி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், டிரோன்-எதிர்ப்பு துப்பாக்கிகள் மாநிலத்துக்கு வரவழைக்கப்பட்டு, மத்திய ரிசர்வ் காவல் படை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரியும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கவர்னர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மணிப்பூர் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டவும், தாக்குதல் நடத்துபவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்காகவு இம்பால் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மருத்துவம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.