அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் தான் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
|அம்பேத்கரை அமித்ஷா அவமதித்து விட்டார் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலடியாக, டாக்டர் அம்பேத்கரை நோக்கி காங்கிரஸ் செய்த பாவங்கள் என பிரதமர் மோடி பட்டியலிட்டு உள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசும்போது அம்பேத்கரை அவமதித்து விட்டதாக கூறி, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று அமளியில் ஈடுபட்டன. அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டாக்டர் அம்பேத்கரை நோக்கி காங்கிரஸ் செய்த பாவங்களின் பட்டியலில் பின்வருவன அடங்கும்:
அவரை ஒரு முறை அல்ல இரண்டு முறை தேர்தலில் தோற்கடித்தது.
பண்டிட் நேரு அவருக்கு எதிராக பிரசாரம் செய்து அவரது தோல்வியை கவுரவ பிரச்சினையாக ஆக்கினார்.
அவருக்கு பாரத ரத்னா மறுப்பு.
பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அவரது உருவப்படம் பெருமைக்குரிய இடத்தில் வைக்க மறுப்பு.
காங்கிரசும், தீங்கிழைக்கும் அதன் பொய்களால் பல வருடங்களாக தங்களின் தவறான செயல்களை, குறிப்பாக டாக்டர் அம்பேத்கரை அவமதித்ததை மறைக்க முடியும் என்று நினைத்தால், அது தவறு.
டாக்டர் அம்பேத்கரின் பாரம்பரியத்தை அழிக்கவும், எஸ்.சி. மற்றும் எஸ்.டி. சமூகங்களை அவமானப்படுத்தவும், ஒரு வம்சத்தின் தலைமையில் ஒரு கட்சி எப்படி எல்லாவிதமான கேடுகெட்ட தந்திரங்களிலும் ஈடுபட்டது என்பதை இந்திய மக்கள் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறார்கள்.
டாக்டர் அம்பேத்கரை அவமதித்த மற்றும் எஸ்.சி., எஸ்.டி. சமூகங்களை புறக்கணித்த காங்கிரசின் இருண்ட வரலாற்றை அமித்ஷா அம்பலப்படுத்தினார். அவர் முன்வைத்த உண்மைகளால் காங்கிரசார் திகைத்து விட்டார்கள். அதனால்தான் அவர்கள் இப்போது நாடகங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் மக்களுக்கு உண்மை தெரியும்.
காங்கிரஸ் தான் விரும்பியபடி எதையும் முயற்சி செய்யலாம். பல ஆண்டுகளாக, அவர்கள் ஆட்சியில் அமர்ந்திருந்தாலும், எஸ்.சி., எஸ்.டி. சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்க எந்த ஒரு விஷயத்தையும் செய்யவில்லை. அந்த சமூகங்களுக்கு எதிரான மிக மோசமான படுகொலைகள் அவர்களின் ஆட்சியில் நடந்துள்ளன என்பதை அவர்களால் மறுக்க முடியாது.
டாக்டர் அம்பேத்கருடன் தொடர்புடைய ஐந்து முக்கிய இடங்களான பஞ்சதீர்த்தத்தை மேம்படுத்த எங்கள் அரசாங்கம் உழைத்துள்ளது.
பல தசாப்தங்களாக சைத்ய பூமிக்கான நிலம் தொடர்பான பிரச்சினை நிலுவையில் உள்ளது. எங்கள் அரசாங்கம் பிரச்சினையை தீர்த்தது மட்டுமல்ல, நான் அங்கு பிரார்த்தனை செய்ய சென்றேன்.
டாக்டர் அம்பேத்கர் தனது கடைசி ஆண்டுகளை கழித்த டெல்லியில் உள்ள 26, அலிபூர் சாலையையும் நாங்கள் மேம்படுத்தி உள்ளோம்.
லண்டனில் அவர் வசித்த வீடும் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கரை பொறுத்தவரை, நமது மரியாதை முழுமையானது. நாம் என்னவாக இருக்கிறோம் என்பதற்கு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரே காரணம்.
கடந்த பத்தாண்டுகளாக டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற எமது அரசு அயராது உழைத்துள்ளது. 25 கோடி மக்களை வறுமையில் இருந்து அகற்றுவது, எஸ்.சி./எஸ்.டி. சட்டத்தை வலுப்படுத்துவது, ஸ்வச் பாரத், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, ஜல் ஜீவன் மிஷன், உஜ்வாலா யோஜனா போன்ற எமது அரசின் முதன்மை திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை தொட்டவை. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.