நாடாளுமன்ற நேரம் வீணடிப்பு.. காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: பட்னாவிஸ் வலியுறுத்தல்
|காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அம்பேத்கருக்கு மரியாதை கொடுத்ததில்லை என தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
நாக்பூர்:
மராட்டிய முதல் -மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று நாக்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டாக்டர் அம்பேத்கர் குறித்து கருத்து தெரிவித்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் நடத்தும் போராட்டம் நாடகம் என்றார்.
காந்தி குடும்பம் அம்பேத்கரை எப்போதும் எதிர்த்தது எப்படி? என்பதை பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியதாகவும் பட்னாவிஸ் தெரிவித்தார்.
உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் நடத்தும் நாடு தழுவிய போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "அமித் ஷா பேசியதில், அம்பேத்கர் பற்றி கூறிய ஒரு பகுதி வீடியோவை மட்டும் ட்வீட் செய்து, நாடாளுமன்ற நேரத்தை வீணடித்து, இப்போது மக்களின் நேரத்தை வீணடிக்கிறது. இதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.
காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு மரியாதை கொடுத்ததில்லை. ஆனால் இப்போது அவரது பெயரை அரசியலுக்கு பயன்படுத்த நினைக்கிறது என்றும் பட்னாவிஸ் குற்றம்சாட்டினார்.