'அம்பேத்கரின் பெயரை பயன்படுத்த காங்கிரஸ் கட்சிக்கு தார்மீக உரிமை இல்லை' - பா.ஜ.க. எம்.பி. பசவராஜ் பொம்மை
|அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு தார்மீக உரிமை இல்லை என பா.ஜ.க. எம்.பி. பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாவெரி மாவட்டத்தில் உள்ள ஷிக்கான் நகரில் பா.ஜ.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. எம்.பி.யும், முன்னாள் முதல்-மந்திரியுமான பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"இடஒதுக்கீடு கொள்கையை அம்பேத்கர் முன்மொழிந்தபோது, அப்போதைய காங்கிரஸ் தலைவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் மகாத்மா காந்தியுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் பூனே ஒப்பந்தத்திற்கு பிறகுதான் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதியும், சம உரிமையும் கிடைக்காவிட்டால் இந்த சுதந்திரத்தால் என்ன பயன் இருக்கிறது?
அம்பேத்கர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் இடஒதுக்கிட்டை அமல்படுத்திவிடுவார் என்று பயந்து, அவருக்கு எதிராக எஸ்.ஜே.பட்டீலை காங்கிரஸ் கட்சி நிறுத்தியது. ஆனால் இப்போது காங்கிரஸ் கட்சி அம்பேத்கர் மற்றும் இடஒதுக்கீடு பற்றி பேசி வருகிறது. அம்பேத்கர் மறைந்தபோது, டெல்லியில் அவரது இறுதிசடங்கு நிகழ்வுக்கு ஒரு இடத்தைக் கூட காங்கிரஸ் வழங்கவில்லை. அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை."
இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.