< Back
தேசிய செய்திகள்
அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி காங்கிரஸ் எம்.பி. மக்களவையில் நோட்டீஸ்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி காங்கிரஸ் எம்.பி. மக்களவையில் நோட்டீஸ்

தினத்தந்தி
|
25 Nov 2024 9:38 AM IST

மக்களவையில் அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, அடுத்த மாதம் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக கூட்டத்தொடர் முழுவதும் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு நேற்று ஏற்பாடு செய்திருந்தது. நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள முதன்மை குழு அறையில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சிவசேனா உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

டிசம்பர் 20-ந் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது. இதில் முக்கியமாக, கடந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வக்பு வாரிய திருத்த மசோதாவை குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது.

எதிர்க்கட்சிகளால் கடும் எதிர்ப்பை சந்தித்த இந்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த குழு, மசோதா தொடர்பான அறிக்கையை குளிர்கால கூட்டத்தொடரில் முதல் வாரத்தின் கடைசி நாளில் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அதன்படி இந்த வாரமே அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

இந்த மசோதாவை தவிர பஞ்சாப் கோர்ட்டுகள் (திருத்தம்) மசோதா, வணிக கப்பல் மசோதா, கடலோர கப்பல்கள் மசோதா, இந்திய துறைமுகங்கள் மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.

மேலும் 2024-25-ம் நிதியாண்டுக்கான துணை மானிய கோரிக்கைகளின் முதல் பகுதியும் தாக்கல் செய்யப்பட்டு விவாதித்து நிறைவேற்றவும் பட்டியலிடப்பட்டு உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான மசோதாக்கள் எதுவும் இந்த தொடருக்காக மத்திய அரசு பட்டியலிடவில்லை. எனினும் அந்த மசோதாவை வருகிற தொடரிலேயே தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும் மணிப்பூர் வன்முறை, லஞ்ச வழக்கில் கவுதம் அதானிக்கு அமெரிக்க ஐகோர்ட்டு பிடிவாரன்ட் பிறப்பித்திருப்பது உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில் மக்களவையில் அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் அளித்துள்ளார். மேலும் இது தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அதானி விவகாரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி., வேணுகோபால் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். அவரைத்தொடர்ந்து காற்று மாசு குறித்து விவாதிக்க காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன் நோட்டீஸ் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்