அமித்ஷாவை கண்டித்து கர்நாடக சட்டசபையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
|அம்பேத்கர் பற்றி அமித்ஷா பேசியதை கண்டித்து கர்நாடக சட்டசபையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
பெங்களூரு,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீது நடந்த சிறப்பு விவாதத்துக்கு நேற்று முன்தினம் உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்தார். அப்போது அம்பேத்கர் பெயரை தொடர்ந்து கூறுவதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியை அவர் விமர்சித்தார். அதாவது, 'அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என கூறுவது இப்போது 'பேஷன்' ஆகி விட்டது. கடவுளின் பெயரை இப்படி கூறியிருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்' என்றார்.
அம்பேத்கர் பற்றி அமித்ஷா பேசியது அரசியல் வட்டாரங்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை தொடங்கிய கர்நாடக சட்டசபையில் மத்திய மந்திரி அமித்ஷாவை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அம்பேத்கர் புகைப்படங்களை கையில் ஏந்தியபடி போராட்டம் நடத்தினர். இதில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவும் கலந்து கொண்டார். ராஜ்யசபா தலைவர் உண்மையிலேயே அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டிருந்தால், அவர் அமித்ஷாவை உடனடியாக சபையில் இருந்து சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும் என்று சட்டசபையில் சித்தராமையா தெரிவித்தார். அதன்பின்னர், சட்டசபையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.