< Back
தேசிய செய்திகள்
Speaker election Congress division of votes jairam ramesh
தேசிய செய்திகள்

சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி டிவிஷன் வாக்கெடுப்பு கேட்காதது ஏன்? ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

தினத்தந்தி
|
26 Jun 2024 5:59 PM IST

ஒவ்வொரு எம்.பி.யின் வாக்கும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கேட்பதற்கு எம்.பி.க்களுக்கு உரிமை உள்ளது.

புதுடெல்லி:

மக்களவை சபாநாயகர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா மற்றும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். குரல் வாக்கெடுப்பு முறையில் தேர்தல் நடத்தப்பட்டு, சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:-

இந்தியா கூட்டணி கட்சிகள் தங்களின் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி, சபாநாயகர் வேட்பாளராக கொடிகுன்னில் சுரேக்கு ஆதரவாக தீர்மானங்களை முன்வைத்தன. குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு, இந்தியா கூட்டணி கட்சிகள் டிவிஷன் முறை வாக்கெடுப்பை வலியுறுத்தியிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

ஏனென்றால், நாங்கள் ஒருமித்த மனப்பான்மை மற்றும் ஒத்துழைப்பு இருக்கவேண்டும் என விரும்பினோம். பிரதமர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்களில் அந்த உணர்வு இல்லை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொதுவாக குரல் வாக்கெடுப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அதற்கு எம்.பி.க்கள் "ஆம்" என்றும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் "இல்லை" என்றும் சொல்வார்கள். இது குரல் வாக்கெடுப்பு ஆகும். அதேசமயம், ஒவ்வொரு எம்.பி.யின் வாக்கும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கேட்பதற்கு எம்.பி.க்களுக்கு உரிமை உள்ளது. இது டிவிஷன் முறை வாக்கெடுப்பு என்று அழைக்கப்படுகிறது.

அவையில் யாராவது ஒரு உறுப்பினர் எழுந்து குரல் வாக்கெடுப்பு கூடாது, டிவிசன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், அவைத்தலைவர் அதை நிராகரிக்கக்கூடாது என்பது இதுவரை பின்பற்றப்படும் மரபாகும்.

மேலும் செய்திகள்