< Back
தேசிய செய்திகள்
மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு: நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு: நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்

தினத்தந்தி
|
23 July 2024 10:25 PM IST

நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்-மந்திரிகள் புறக்கணிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் இன்று மத்திய மந்திரி நிர்மலா சீதராமன் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும், இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் எனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததுடன், வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில், ஜூலை 27-ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணிக்க உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் மிகவும் பாரபட்சமானது மற்றும் ஆபத்தானது. இது மத்திய அரசு பின்பற்ற வேண்டிய கூட்டாட்சி மற்றும் நேர்மை கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜூலை 27-ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை இந்திய தேசிய காங்கிரஸ் முதல்-மந்திரிகள் புறக்கணிக்க உள்ளனர். இந்த அரசாங்கத்தின் அணுகுமுறை, அரசியலமைப்புச் சட்டங்களுக்கு முற்றிலும் எதிரானது. பா.ஜனதா ஆட்சியின் உண்மையான, பாரபட்சமான நிறங்களை மறைக்க மட்டுமே வடிவமைக்கப்பட்ட ஒரு நிகழ்வில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்" என்று அதில் கே.சி.வேணுகோபால் பதிவிட்டுள்ளார்.



மேலும் செய்திகள்