வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய உதவிகளை வழங்க மத்திய அரசு தவறிவிட்டது - பிரியங்கா காந்தி
|வயநாட்டின் அழகை உலகுக்குக் காட்ட உங்களுக்கு வலுவான உள்கட்டமைப்பு தேவை என்று பிரியங்கா காந்தி கூறினார்.
வயநாடு,
கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வதேரா இன்று தொகுதியின் புல்பள்ளி, கெனிச்சிரா, படிச்சிரா, முட்டில் உள்ளிட்ட இடங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை அவர்களின் பணியிடங்களுக்குச் சென்று பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடினார்.
தேர்தல் பிரசாரங்களில் பிரியங்கா காந்தி வதேரா பேசியதாவது:-
ராகுல் காந்தியும் நானும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எத்தனையோ பயங்கரமான மற்றும் வேதனையான சம்பவங்களை பார்த்திருக்கிறோம். இருப்பினும், வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவு எங்களை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது. மக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்திய ஒரு பேரழிவைக் கூட பாஜக அரசியலாக்க தவறவில்லை. வயநாடு நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு போதுமான உதவிகளை வழங்க மத்திய அரசு தவறிவிட்டது. இந்த விவகாரத்தில் உங்களுக்காக உறுதியான குரலை எழுப்புவேன்.
நான் வயநாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்றபோது, நீங்கள் தினமும் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகள் மற்றும் போராட்டங்களை அறிந்தேன். விலைவாசி உயர்வு, வேலையின்மை, பயனளிக்காத அரசாங்கக் கொள்கைகள், இவை அனைத்தும் உங்கள் வளர்ச்சியைத் தடுக்கின்றன. பணவீக்கம் காரணமாக உங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பது சவாலாக உள்ளது. மேலும், தண்ணீர் தட்டுப்பாடும் உள்ளது. அனைத்து வகையான சுற்றுலாவையும் மேம்படுத்த, வயநாட்டின் அழகை உலகுக்குக் காட்ட உங்களுக்கு வலுவான உள்கட்டமைப்பு தேவை. ஆதரவற்ற நிலையில் விவசாயிகள் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வயநாட்டில் உள்ள பிரச்சினைகளை நன்கு புரிந்து கொள்ளவும், நீடித்த தீர்வுக்கான வலுவான திட்டத்தை உருவாக்கவும் நான் இலக்கு வைத்துள்ளேன். உங்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.