வங்காளதேசத்தின் சிறுபான்மையினருக்கு ஆதரவாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
|வங்காளதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி,
வங்காளதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு இட ஒதுக்கீடு சம்பந்தமான மாணவர்கள் போராட்டம் கலவரமாக உருவெடுத்தது. பிறகு அந்தப் போராட்டம் அங்குள்ள சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதலாக வடிவெடுத்தது. இந்துக்களின் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. இந்துக்கள் பொதுவெளியில் தாக்கப்பட்டனர். கலவர நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிறகும் கூட வங்கதேசத்தில் இந்துக்கள் மீது மதரீதியான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்களை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்ட சுமார் 50 எம்.பி.க்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் இவ்விஷயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வங்காளதேச இந்துக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மக்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தின் போது பேசிய பிரியங்கா காந்தி, "வங்காளதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுகுறித்து அந்நாட்டு அரசாங்கத்துடன் விவாதித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய ஆதரவளிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.