தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைவர் குத்திக்கொலை
|தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் உள்ள ஜக்தியால் மாவட்டத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவர் இன்று காலை அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜக்தியால் மாவட்டத்தில் உள்ள ஜபிதாபூர் கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் மரு கங்காரெட்டி (56) சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. அவர் கீழே விழுந்ததும் காரில் இருந்து ஒருவர் இறங்கி அவரை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இதையடுத்து அங்கு இருந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கங்காரெட்டியின் உடலை ஜக்டியாலில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் எம்.எல்.சி. ஜீவன் ரெட்டியின் நெருங்கிய கூட்டாளி என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இறந்தவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் கொலைக்கு வழிவகுத்தது என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாகிவிட்டதால் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.