< Back
தேசிய செய்திகள்
எக்ஸ் தளத்தில் இருந்து அமித்ஷா பேச்சை மத்திய அரசு நீக்க சொல்வது ஏன்? - காங்கிரஸ் கேள்வி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

எக்ஸ் தளத்தில் இருந்து அமித்ஷா பேச்சை மத்திய அரசு நீக்க சொல்வது ஏன்? - காங்கிரஸ் கேள்வி

தினத்தந்தி
|
20 Dec 2024 2:19 AM IST

மாநிலங்களவையில் அமித்ஷா பேசியதைதான் நாங்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளோம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 17-ந்தேதி அம்பேத்கர் குறித்து மாநிலங்களவையில் பேசிய கருத்துகள் எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் சாசனம் குறித்த சிறப்பு விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அவர், 'அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என கூறுவது இப்போது 'பேஷன்' ஆகி விட்டது. கடவுளின் பெயரை இப்படி கூறியிருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்' என்று காங்கிரஸ் கட்சியை சாடினார்

அமித்ஷாவின் இந்த கருத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. நாடாளுமன்றத்திலும் பெரும் போர்க்குரலை எழுப்பி வருகின்றன. அமித்ஷாவின் சர்ச்சைக்குரிய பேச்சை எக்ஸ் வலைத்தள பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளியிட்டு உள்ளனர். இந்தநிலையில் அந்த பேச்சு அடங்கிய வீடியோவை நீக்குமாறு எக்ஸ் தள நிறுவனத்துக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷரினேட் கூறுகையில், "மாநிலங்களவையில் அமித்ஷா பேசியதைதான் நாங்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளோம். அதில் எதுவும் வெட்டி, ஒட்டி பதிவிடவில்லை. ஆனால் அந்த வீடியோவை நீக்குமாறு எக்ஸ் தள நிறுவனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது. ஆனால் கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும் அந்த நிறுவனம் அதை நீக்க மறுத்துவிட்டது. உங்கள் பேச்சில் தவறு இல்லை என்றால் இதுபோன்று ஏன் செய்ய வேண்டும்.

ஆனால் மத்திய மந்திரி அமித்ஷாவை கண்டித்து நாங்கள் (காங்கிரஸ் எம்.பி.க்கள்) நடத்திய போராட்டத்தின்போது எங்களது கைகளில் இருந்த அம்பேத்கரின் படத்தை மாற்றி அதற்கு பதில் அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரசின் படத்தை ஒட்டி வலைத்தளங்களில் பா.ஜனதா ஊடகப்பிரிவு வெளியிடுகிறது. இதுபோன்ற காரணங்களால் காங்கிரசை ஒரு போதும் மிரட்டமுடியாது. அம்பேத்கர் குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதற்கு அமித்ஷா மன்னிப்பு கேட்கவேண்டும்" என்று அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்