தொடர்ந்து நீடிக்கும் வன்முறை : மணிப்பூரில் இதுவரை 258 பேர் பலி
|மணிப்பூர் வன்முறை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 258 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் அங்குள்ள குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலை தொடர்ந்து அங்கு பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை எடுக்கும் என முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
அங்கு சமீபத்தில் 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை பயங்கரவாதிகள் கடத்திக் கொலை செய்த சம்பவத்தால் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இந்த கொலையை கண்டித்து கடந்த 16-ந் தேதி மாநிலம் முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தலைநகர் இம்பால் உள்பட பல மாவட்டங்களில் மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் வீடுகளை வன்முறையாளர்கள் சூறையாடினர். வீடுகளில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது மட்டும் இன்றி வீடுகளுக்கு தீவைத்தும் சென்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்தியிலும், மணிப்பூர் மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த சூழலில் மணிப்பூருக்கு மேலும் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில தலைமை பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தெரித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மணிப்பூருக்கு ராணுவத்தின் 90 கம்பெனிகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் வீரர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மணிப்பூருக்கு அனுப்பப்படும் ராணுவ கம்பெனிகளின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டதாக தற்போது வரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருடப்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன" என்று அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் இதுவரை மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் மொத்தம் 258 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தெரிவித்தார்.