பெண் டாக்டர் கொலை வழக்கில் சிக்கலான பிணைப்பு; கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்
|மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் கொலை வழக்கில் சந்தீப் கோஷ் மற்றும் அபிஜித் மொண்டல் ஆகிய இருவரையும் 2 நாட்கள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி, சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் ஒன்றிற்கு மேற்பட்ட நபர்களுக்கு தொடர்பு உள்ளது என பெண் டாக்டரின் தந்தை தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் படுகொலை வழக்கில், சந்தீப் கோஷ் மற்றும் தலா காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகிய இருவரையும் சி.பி.ஐ. நேற்று முன்தினம் இரவில் கைது செய்தது. இதனை தொடர்ந்து அபிஜித் மொண்டல், மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார்.
இந்த வழக்கில் ஆர்.ஜி. கார் கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதில், நிதி முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. அவரை கைது செய்திருந்தது. அவருடைய வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனையும் நடத்தியது. இந்நிலையில், பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் படுகொலை வழக்கில் தடய அழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில், 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரும் நேற்று (ஞாயிற்று கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் 2 நாட்கள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு வருகிற செவ்வாய் கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.
இந்நிலையில், சி.பி.ஐ. அமைப்பின் வழக்கறிஞர் கோர்ட்டில் பேசும்போது, இரவில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. சந்தீப் கோஷுக்கும், பொறுப்பு அதிகாரி மொண்டலுக்கும் இடையே தகவல் தொடர்பு இருந்ததற்கான தொலைபேசி பதிவுகள் எங்களுக்கு கிடைத்துள்ளன. இதில் சிக்கலான பிணைப்பு இருக்க கூடும். அதனை வெளிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அவர்கள் இருவரையும் விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறும்போது, சி.பி.ஐ. அமைப்புக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் இல்லை. உண்மை தெரிய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு அவர், காவல் அதிகாரி இல்லை. அவர் ஒரு சந்தேகத்திற்குரிய நபர் என்றும் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில், 14 மணிநேரம் கழித்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. சம்பவம் நடந்த பின்னர் காலதாமதம் ஏற்பட்டது பற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு என இரண்டு முக்கிய கோர்ட்டுகளும் கேள்வி எழுப்பியிருந்தன. டாக்டர் கோஷ் தலைமையிலான மருத்துவமனை நிர்வாகம் ஏன் உடனடியாக போலீசில் புகாரை பதிவு செய்யவில்லை என கேள்வி எழுப்பியிருந்தன.
இதுபற்றி கோர்ட்டில் சி.பி.ஐ. கூறும்போது, இந்த வழக்கை தற்கொலை போன்று காட்ட அவர்கள் முயற்சித்து உள்ளனர். இது ஒரு பாலியல் பலாத்கார வழக்கு. இதனை டாக்டர் கோஷ் எச்சரிக்கையுடன் கையாண்டிருக்க வேண்டும். மற்றவர்களுடன் சேர்ந்து கூட்டு சதியில் அவர் ஈடுபட்டு இருக்கிறார் என தெரிவித்து உள்ளது.