டெல்லியில் பட்டாசுகளுக்கு முற்றிலுமாக தடை விதிப்பு
|தலைநகர் டெல்லியில் பட்டாசுகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லி, மாசு அதிகம் உள்ள நகரம் ஆகும். குளிர்காலத்தில் மாசுபாடு மிக அதிகமாக இருக்கும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
மாசு குறைபாட்டுக்கு பட்டாசுகள் வெடிப்பதும் ஒரு காரணம் என கருதப்படுவதால் அது குறித்த வழக்கின் அடிப்படையில் டெல்லியில் பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு தடை விதித்தது. அதே நேரத்தில் பேரியம் உப்பு இல்லாத பசுமை பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதித்தது. ஆனால் பசுமைப் பட்டாசு வகைகளை வேறுபடுத்துவதில் சிரமங்கள் எழுந்ததால் பொத்தாம் பொதுவாக அனைத்து வித பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு 2020-ம் ஆண்டு முதல் தடை விதித்து வருகிறது. இதன்படி இந்த ஆண்டின் குளிர்காலத்தை முன்னிட்டு பட்டாசுக்கு கடந்த மாதம் 9-ந்தேதி தடை விதித்தது.
இதே தடை உத்தரவை நேற்று டெல்லி மாசு கட்டுப்பாட்டுக்குழுவும் பிறப்பித்தது. இதன்படி பட்டாசு உற்பத்தி, இருப்பு வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் வாங்குதல், வெடித்தல் போன்ற எதையுமே செய்ய முடியாது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் விதத்தை டெல்லி போலீஸ் தினம்தோறும் அறிக்கையாக சமர்ப்பிக்கவும் மாசு கட்டுப்பாட்டுக்குழு கேட்டு இருக்கிறது.