
கோப்புப்படம்
சோனியாகாந்தி மீது பீகார் கோர்ட்டில் வழக்கு

நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரத்தை சோனியா அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாட்னா,
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையைத் தொடர்ந்து, திரவுபதி முர்முவை "மோசமான விஷயம்" என்று குறிப்பிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேசியதாக முசாபர்பூர் கோர்ட்டில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தையொட்டி கடந்த 31-ந் தேதி நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, "ஜனாதிபதி, உரையின் இறுதிப்பகுதியை வாசிக்கும்போது மிகவும் சோர்வடைந்து விட்டார். அவரால் பேச முடியவில்லை. பாவம்" என்று கூறினார். சோனியா காந்தியின் இந்த கருத்து பா.ஜனதாவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி உள்பட பா.ஜனதா தலைவர்கள் பலரும் சோனியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ஜனாதிபதி மாளிகையும் சோனியா காந்தியின் பேச்சை கண்டித்திருந்தது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பீகார் மாநிலம் முசாபர்பூர் கோர்ட்டில் சோனியா காந்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரத்தை சோனியா அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டி சுதிர் ஓஜா என்கிற வக்கீல் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். சோனியா மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள சுதிர் ஓஜா, இந்த வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோரையும் இணை குற்றவாளிகளாக சேர்த்து அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு முசாபர்பூர் கோர்ட்டில் வருகிற 10-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.