டெல்லி - காஷ்மீர் ரெயில் சேவை: பிரதமர் மோடி 26-ம் தேதி தொடங்கி வைக்கிறார்
|வைஷ்ணவி கோவில் அடிவாரத்தில் மலையை குடைந்து சுமார் 3 கிலோமீட்டர் ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் இருந்து காஷ்மீரில் உள்ள பாரமுல்லா என்ற பகுதிக்கு இதுவரை நேரடி ரெயில் சேவை இல்லாத நிலையில் 37 ஆயிரத்து 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ரெயில் சேவைக்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.
272 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த ரெயில் சேவையில் உதம்பூர், ஸ்ரீநகர், பாரமுல்லாவை இணைக்கும் வகையில் ரெயில் தடம் அமைய உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக புதிய தண்டவாளம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. தற்போது மின் வசதி கொடுப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்த பணிகளும் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் வைஷ்ணவி கோவில் அடிவாரத்தில் மலையை குடைந்து சுமார் 3 கிலோமீட்டர் பாதை அமைக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சுரங்கப்பாதை வெற்றிகரமாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். இந்த பணிகள் திட்டமிட்டபடி முடிந்தால் வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தன்று டெல்லி- காஷ்மீர் பாரமுல்லா இடையே இந்தியாவின் முதல் ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.