மரக்கிளை முறிந்து விழுந்து பைக்கில் சென்ற கல்லூரி மாணவி பலி
|மரக்கிளை முறிந்து விழுந்து பைக்கில் சென்ற கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி அனா மேரி (வயது 21). இவர் நேற்று மாலை 6 மணியளவில் தனது தோழனான கல்லூரி மாணவன் அதப் அப்பெக்கர் (வயது 21) உடன் பைக்கில் சென்றுள்ளார்.
எர்ணாகுளம் மாவட்டம் சம்பன்குட்டி கிராமம் அருகே நாகராம்புரா வனப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, வனப்பகுதியில் உள்ள மரத்தின் கிளை முறிந்து பைக்கில் சென்ற அனே மேரி, அதப் அப்பெக்கர் மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறிய இருவரும் பைக்கில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.
இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் கோதமங்களத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கல்லூரி மாணவி அனா மேரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதப் அப்பெக்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.