< Back
தேசிய செய்திகள்
கல்லூரி மாணவியை மாஞ்சோலைக்குள் கடத்தி சென்று... 35 நாட்களில் 5 கொலைகள்; சீரியல் கில்லரின் அதிர்ச்சி பின்னணி
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவியை மாஞ்சோலைக்குள் கடத்தி சென்று... 35 நாட்களில் 5 கொலைகள்; சீரியல் கில்லரின் அதிர்ச்சி பின்னணி

தினத்தந்தி
|
27 Nov 2024 11:34 AM IST

குஜராத்தில் தோழியுடன் மொபைல் போனில் பேசியபடி தனியாக நடந்து சென்ற 19 வயது கல்லூரி மாணவி பின்னர் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

வல்சாத்,

குஜராத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 14-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுபற்றி வல்சாத் நகர போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வாபி, வல்சாத், சூரத் மற்றும் உத்வாடா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏறக்குறைய 2 ஆயிரம் சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்ததில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுவரை கர்நாடகா, மேற்கு வங்காளம், தெலுங்கானா மற்றும் மராட்டிய மாநில ரெயில் நிலையங்களில் பலரை கொலை செய்தும், பணம், நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்தும் சென்றுள்ளது தெரிய வந்தது.

அவர் ராகுல் என்ற போலு கரம்வீர் ஈஸ்வர் ஜாட் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். மாற்றுத்திறனாளியான அவர், அதனை பயன்படுத்தி ரெயில்களில் அடிக்கடி பயணித்து வந்துள்ளார்.

அரியானாவின் ரோத்தக் மாவட்டத்தில் பனா சியாம் கிராமத்தில் வசித்து வரும் ராகுல், கடந்த காலங்களில் ராஜஸ்தான், அரியானா, உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் லாரி திருட்டு மற்றும் சட்டவிரோத ஆயுத கடத்தல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2018, 2024 ஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 14-ந்தேதி குஜராத்தின் மோதிவாடா கிராமத்திற்கு கல்லூரி மாணவி (வயது 19) ஒருவர் தோழியுடன் மொபைல் போனில் பேசியபடி தனியாக நடந்து சென்றுள்ளார்.

அவர் வீடு திரும்புவதற்காக, ரெயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்றபோது, பின்னால் ராகுல் வந்திருக்கிறார். ராகுல் முன்பு வேலை பார்த்த ஓட்டலில் சம்பள பாக்கியை வாங்க பயணிகள் ரெயிலில் ஏறி, உத்வாடா பகுதியில் இறங்கி நடந்து சென்றபோது, மாணவியை பார்த்திருக்கிறார். அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்று தாக்கி, அருகேயிருந்த மாஞ்சோலைக்குள் இழுத்து சென்றுள்ளார்.

இதன்பின்னர், அந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, படுகொலையும் செய்திருக்கிறார். இந்த பகுதியில் இருந்து பை, ஆடைகள் மற்றும் மாணவியின் பிற உடைமைகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதுபற்றி வல்சாத் போலீஸ் சூப்பிரெண்டு கரண்ராஜ் வகேலா கூறும்போது, ரெயில்வே போலீசார் மற்றும் உள்ளூர் போலீஸ் உதவியுடன் கடந்த ஞாயிற்று கிழமை இரவில் ராகுலை கைது செய்திருக்கிறோம்.

அவர், அடிக்கடி ரெயில் பயணம் செய்வதும், ரெயில் நடைமேடைகளில் படுத்து உறங்கும் வழக்கமும் வைத்திருக்கிறார். கைது நடவடிக்கையில் இருந்து தப்ப, புலம்பெயர்ந்து சென்றபடியே இருந்திருக்கிறார் என கூறியுள்ளார்.

கடந்த கால பின்னணி:

கடந்த ஆண்டு அக்டோபரில் புனே-கன்னியாகுமரி ரெயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் தனியாக இருந்த பெண்ணை கவனித்த ராகுல், அவரை பலாத்காரம் செய்து, கொலை செய்து விட்டார். இதன்பின்பு, பணம், நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து விட்டு அடுத்த ரெயில் நிலையத்தில் இறங்கி தப்பி விட்டார்.

கடந்த 19-ந்தேதி கத்திஹார் எக்ஸ்பிரசில் 60 வயது முதியவரை பலமுறை கத்தியால் குத்தி விட்டு, அவரிடம் இருந்த பணம், உடைமைகளை கொள்ளையடித்து விட்டு தப்பினார். இதேபோன்று, கடந்த 14-ந்தேதி மங்களூரு சிறப்பு எக்ஸ்பிரசில் பெண் ஒருவரை படுகொலை செய்து, அவரிடம் இருந்து பணம், செல்போன் போன்றவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி விட்டார்.

கடந்த அக்டோபர் 25-ந்தேதி பெங்களூரு-முர்தேஷ்வர் ரெயிலில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் பெட்டியில், சக பயணி ஒருவரை கொலை செய்து விட்டு, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளார்.

கைது நடவடிக்கைக்கு முந்தின நாள் கூட, தெலுங்கானாவின் செகந்திராபாத் ரெயில் நிலையத்தில், ரெயில் ஒன்றில் பெண் ஒருவரிடம் இருந்து பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து விட்டு, அவரை கொலை செய்துள்ளார். மாற்றுத்திறனாளியான ராகுல், அதனை வாய்ப்பாக பயன்படுத்தி, அடிக்கடி ரெயிலில் பயணம் செய்தும், தனியாக இருக்கும் பெண், ஆண் ஆகியோரை தாக்கி, கொலை செய்து, கொள்ளையடிக்கும் நோக்கில் செயல்பட்டு இருக்கிறார்.

பெண்களை பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார். சமீபத்தில், கல்லூரி மாணவி படுகொலையை தொடர்ந்தே இந்த வழக்கு விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த அக்டோபர் 17-ந்தேதி முதல் கடந்த ஞாயிற்று கிழமை வரையில் 35 நாட்களில் 5 கொலைகளில் ஈடுபட்டு இருக்கிறார் என போலீசாரிடம் ராகுல் தெரிவித்து உள்ளார். இவற்றில் சில பணம் மற்றும் நகை உள்ளிட்டவற்றுக்காக நடந்துள்ளன. பாலியல் பலாத்கார சம்பவங்களும் நடந்துள்ளன. எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சுற்றியபடியே, 5 மாநிலங்களில் 5 கொலைகளை செய்திருக்கிறார். இந்த அதிர்ச்சிகர சம்பவங்களை பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்