< Back
தேசிய செய்திகள்
சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.1.44 லட்சம் கோடி வசூல்: நிதின் கட்காரி
தேசிய செய்திகள்

சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.1.44 லட்சம் கோடி வசூல்: நிதின் கட்காரி

தினத்தந்தி
|
29 Nov 2024 2:35 AM IST

சுங்கச்சாவடிகளில் பயணத்திட்டம்-தூரம் அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.

புதுடெல்லி,

மக்களவையில் சுங்க கட்டணம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க, சுங்க வரி கட்டண விதிகள் 2008-ன் படி சுங்கச்சாவடிகள் நிறுவப்பட்டன. அதை நடைமுறைப்படுத்தி, 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவரை 1.44 லட்சம் கோடி ரூபாய் சுங்க வரியாக வசூலிக்கப்பட்டு உள்ளன.

தடையின்றி கட்டணம் வசூலிப்பதற்காக நவீன தொழில்நுட்ப முறையில் வரி வசூலிக்கும் பாஸ்டாக் நுட்பமும் அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. செயற்கை கோள் மூலம் வரிவசூலிக்கும் ஜி.என்.எஸ்.எஸ். நுட்பம் தேசிய நெடுஞ்சாலைகளில் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்த 2008 நெடுஞ்சாலை கட்டண விதிகளில், கடந்த செப்டம்பர் 9-ந்தேதி திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இது நடைமுறைக்கு வரும்போது 'ஆன்போர்டு யூனிட்' எனப்படும் நுட்பத்தில் இணைத்து பயன்படுத்தும் வாகனங்களுக்கு, அவை நெடுஞ்சாலையில் பயணிக்கும் தூரம் செயற்கை கோள் மூலம் கணக்கிடப்பட்டு சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது வரை அந்தந்த சுங்கச்சாவடிகளில் பயணத்திட்டம்-தூரம் அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்