எருமேலியில் அய்யப்ப பக்தர்களிடம் ரூ.10 வசூல்: கேரள ஐகோர்ட்டு கண்டனம்
|எருமேலி சாஸ்தா கோவிலில் அய்யப்ப பக்தர்கள், சந்தனம், பொட்டு வைக்க ரூ.10 கட்டணம் வசூலிக்கும் தேவஸ்தானத்தின் முடிவுக்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்,
சபரிமலைக்கு சாமி தரிசனத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்கள், எருமேலி சாஸ்தா கோவிலுக்கு செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் பக்தர்கள் சாஸ்தா கோவிலில் வைக்கப்பட்டிருக்கும் விபூதி, சந்தனம் மற்றும் குங்குமத்தை நெற்றியில் பூசி இலவசமாக சாமி தரிசனம் செய்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எருமேலிக்கு வரும் பக்தர்கள் சந்தனம், பொட்டு வைப்பதற்கு ரூ.10 கட்டணமாக செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டது. மேலும் இதற்காக ரூ.3 லட்சத்திற்கான டெண்டரையும் விட்டுள்ளது. இதற்கு எதிராக எருமேலியை சேர்ந்த மனோஜ் என்பவர் ஐகோர்ட்டில் மனு செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், அஜித்குமார் ஆகியோர் அடங்கிய தேவஸ்தான சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது பக்தர்களை ஏமாற்றுவது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு தேவஸ்தானத்தின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் கேரளாவில் அனைத்து கோவில்களிலும் சந்தனம், குங்குமம், விபூதி ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது எருமேலியில் மட்டும் சந்தனம், பொட்டு வைப்பதற்கு ரூ.10 கட்டணமாக வசூலிப்பது ஏன்? என கேள்வி எழுப்பினர். இந்த மனு மீதான விசாரணையை வருகிற 12-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.