ஏர் இந்தியா விமானத்தில் பரிமாறிய 'ஆம்லெட்'டில் கரப்பான்பூச்சி
|ஆம்லெட்டில் கரப்பான்பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
நியூடெல்லி,
டெல்லியை சேர்ந்தவர் சுயிஷா சாவந்த் 2 வயது குழந்தையுடன் நியூயார்க் நகரத்துக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்றார். விமான பயணிகளுக்கு ஆம்லெட்டுடன் கூடிய மதிய உணவு கொடுக்கப்பட்டது. அதனை வாங்கி சுயிஷா தனது குழந்தைக்கு ஊட்டியபடி சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அப்போது ஆம்லெட்டில் கரப்பான்பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து விமான பணிப்பெண்களிடம் புகார் தெரிவித்துள்ளார். சரியான முறையில் அவர்கள் பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆம்லெட்டில் கரப்பான்பூச்சி இருந்ததை வீடியோவாக எடுத்து கொண்டார். நியூயார்க் நகரில் விமானம் தரையிறங்கிய உடனேயே ஏர் இந்தியா நிர்வாகம், விமான போக்குவரத்துறை மந்திரி ஆகியோரிடம் புகார் செய்தார்.
இந்தநிலையில் இதற்கு மன்னிப்பு தெரிவித்த ஏர் இந்தியா நிர்வாகம், உரிய விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது.