மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் சுட்டுக்கொலை; மம்தா பானர்ஜி இரங்கல்
|திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவரும், திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலருமான துலாலா சர்க்கார் என்ற பாப்லாவை இன்று ஆயுதமேந்திய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜல்ஜாலியா மோர் என்ற இடத்தில் இரண்டு பைக்கில் வந்த நபர்கள் சர்காரை பலமுறை சுட்டனர். இதில் அவர் மீது 3 தோட்டாக்கள் பாய்ந்தது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றார்.
இந்த சம்பவத்திற்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, எனக்கு மிகவும் நெருக்கமானரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொடக்கத்தில் இருந்து கட்சிக்காக கடுமையாக உழைத்தவரும், கவுன்சிலருமான சர்க்கார் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.