இந்தூரில் பிச்சைக்காரர்கள் பற்றி தகவல் கொடுத்தால் 1000 ரூபாய் வெகுமதி.. மக்களிடையே வரவேற்பு
|இந்தூரில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் அடையாளம் காணப்பட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தூரில் பிச்சை எடுப்பதும், பிச்சை போடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுப்போருக்கு 1000 ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஜனவரி 2-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
பிச்சைக்காரர்கள் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிப்பதற்காக தனி மொபைல் எண் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துவருகின்றனர். பிச்சைக்காரர்களை அகற்றுவதற்கான இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், மக்கள் தங்கள் பகுதிகளில் பிச்சை கேட்கும் நபர்களைப் பற்றிய தகவல்களை வழங்க முன்வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபற்றி மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் சிங் கூறுகையில், "பிச்சைக்காரர்கள் பற்றி தகவல் கொடுப்பதற்காக வழங்கப்பட்ட எண்ணில் சுமார் 200 பேர் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். அதில், 12 பேர் கொடுத்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேருக்கு தலா 1000 ரூபாய் வெகுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
பிச்சை எடுப்பதற்கான தடையை மீறுவோர் மீது பாரதிய நியாய் சன்ஹிதா சட்டத்தின் 223-வது பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் வரை சிறை தண்டனையும், 5,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
இந்தூரில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் அடையாளம் காணப்பட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். 64 குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்தூர் உள்ளிட்ட 10 முக்கிய நகரங்களை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றும் கனவுத் திட்டத்தை மத்திய சமூக நலன் மற்றும் அதிகாரமளித்தல் துறை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.