< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

சூரல்மலை-முண்டக்கை இடையே இந்திய ராணுவத்தால் 16 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட பாலம்

தினத்தந்தி
|
1 Aug 2024 8:58 PM IST

சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகளை இணைக்கும் பெய்லி பாலத்தை இந்திய ராணுவத்தினர் 16 மணி நேரத்தில் கட்டி முடித்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலையில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்தனர். சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 295-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ராணுவம், விமானப்படை, கடற்படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், போலீசார், தீயணைப்பு வீரர்கள் முழு வீச்சில் போராடி வருகின்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகளை இணைக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் 'பெய்லி பாலம்' எனப்படும் 190 அடி நீள இரும்பு பாலத்தை கட்டி முடித்துள்ளனர். மெட்ராஸ் ரெஜின்மெண்ட்டை சேர்ந்த ராணுவ பொறியாளர்கள் இணைந்து இந்த பாலத்தை அமைத்துள்ளனர்.

நேற்று(ஜூலை 31) இரவு 9 மணிக்கு தொடங்கிய பாலம் அமைக்கும் பணி, இன்று(ஆகஸ்ட் 1) மாலை 5.30 மணிக்கு(16 மணி நேரத்தில்) முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 24 டன் எடையை தாங்கக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முண்டக்கை பகுதியில் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள இந்த பாலம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.



மேலும் செய்திகள்