கர்நாடகாவில் வீடு புகுந்து குழந்தைகள் கடத்தல்: வெளியான பரபரப்பு வீடியோ
|தந்தையை பழிவாங்குவதற்காக இரண்டு குழந்தைகளையும் கடத்தியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் அத்தானி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த 2 பேர், அங்கு விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகளை கடத்தி சென்றுள்ளனர். இந்த சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அதில், முகமூடி அணிந்தபடி கூர்மையான ஆயுதங்களுடன் வந்திருந்த மர்ம நபர்கள் 2 பேர், வீட்டிற்குள் நுழைந்த சில நிமிடங்களில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகளையும் தோளில் சுமந்து கொண்டு வெளியே சென்று, அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் கடத்தி சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் தந்தை உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரித்துள்ளார். இதையடுத்து கடத்தி சென்ற காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்துள்ளனர். அப்போது அவர்கள் போலீசாரை தாக்க முயன்றதால் போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டு அவர்களை பிடித்தனர். இதில் குழந்தைகளை கடத்திய 2 நபர்களும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடத்தப்பட்ட இரண்டு குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் பரபரப்பு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரியல் எஸ்டேட் பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது. தந்தையை பழிவாங்குவதற்காக இரண்டு குழந்தைகளையும் கடத்தியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பணப் பரிவர்த்தனையால் ஏற்பட்ட தகராறில் குழந்தைகள் கடத்தப்பட்டார்களா இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.