சத்தீஷ்கார்: குண்டுவெடிப்பில் பலியான 8 போலீசாரில் 5 பேர் முன்னாள் நக்சலைட்டுகள்; அதிர்ச்சி தகவல்
|சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளாக தீவிரமுடன் செயல்பட்டு வந்த 5 பேர் போலீசில் சரணடைந்து, பின்னர் காவல் துறையில் இணைந்துள்ளனர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் அம்பேலி கிராமத்தில் பாதுகாப்பு வாகனத்தில் போலீசார் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மாவோயிஸ்டுகள் வைத்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் வாகன ஓட்டுநர் மற்றும் 8 போலீசார் உயிரிழந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். இந்நிலையில், பலியான 8 போலீசாரில் 5 பேர் முன்னாள் நக்சலைட்டுகள் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.
இதுபற்றி ஐ.ஜி. (பஸ்தர் சரகம்) சுந்தர்ராஜ் நிருபர்களிடம் கூறும்போது, நக்சலைட்டுகளாக இருந்த 5 பேர் அதில் இருந்து வெளியேறி காவல் துறையில் சேர்ந்தனர். அவர்களில் தலைமை கான்ஸ்டபிள் புத்ராம் கோர்சா, கான்ஸ்டபிள்கள் தும்ம மர்காம், பண்டாரு ராம், பாமன் சோதி ஆகியோர் மாவட்ட ரிசர்வ் படையில் பணியாற்றி வந்துள்ளனர்.
சோம்டு வெத்தி, பஸ்தார் பகுதிக்கான கான்ஸ்டபிளாக இருந்துள்ளார். இவர்கள் நக்சலைட்டுகளாக தீவிரமுடன் செயல்பட்டு வந்தனர். இதன்பின்பு அதில் இருந்து வெளியேறி, போலீசில் சரணடைந்தனர். இதன்பின்னர் காவல் துறையில் இணைந்தனர் என கூறியுள்ளார்.
கோர்சா மற்றும் சோதி இருவரும் பிஜாப்பூர் மாவட்டத்திலும், மற்ற 3 பேர் தன்டேவாடா மாவட்டத்திலும் வசித்து வந்தவர்கள் ஆவர். கடந்த ஆண்டு 7 மாவட்டங்களை சேர்ந்த 792 நக்சலைட்டுகள் போலீசில் சரணடைந்தனர்.