மசூதியில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிடுவது மத உணர்வுகளை புண்படுத்தாது - கர்நாடக ஐகோர்ட்டு
|மசூதியில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட்டது தொடர்பாக 2 நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் மசூதிக்குள் 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷங்களை எழுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 2 நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ந்தேதி இரவு சுமார் 10.50 மணியளவில், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மசூதிக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியதாகவும், 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷங்களை எழுப்பியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக காவல்துறையினர் பதிவு செய்த புகாரில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் தெரியாத நபர்கள் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் 2 நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து, கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி எம்.நாகபிரசன்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மசூதியில் 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிடுவது எந்த சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தும் என்பது புரியவில்லை என்று குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட பகுதியில் இந்துக்களும், முஸ்லீம்களும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருவதாக புகார்தாரர் கூறியிருப்பதாக நீதிபதி சுட்டிக் காட்டினார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.) பிரிவுகள் 447 (கிரிமினல் அத்துமீறல்), 505 (பொது தீமைகளுக்கு வழிவகுக்கும் பேச்சுகள்), 506 (கிரிமினல் மிரட்டல்), 34 (பொது நோக்கம்) மற்றும் 295 ஏ (மத உணர்வுகளை அவமதித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை குறிப்பிட்டு, ஐ.பி.சி. 295 ஏ பிரிவின் கீழ், அனைத்து செயல்களும் குற்றமாக மாறாது என்று நீதிபதி தெரிவித்தார்.
அப்பகுதியில் இந்துக்களும், முஸ்லீம்களும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருவதாக புகார்தாரர் கூறியிருக்கும் நிலையில், மசூதியில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிடுவது மத உணர்வுகளை புண்படுத்தாது என்று தெரிவித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.