< Back
தேசிய செய்திகள்
இடஒதுக்கீடு பெறுவதற்காக மத அடையாளத்தை மாற்றுவதை ஏற்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு
தேசிய செய்திகள்

'இடஒதுக்கீடு பெறுவதற்காக மத அடையாளத்தை மாற்றுவதை ஏற்க முடியாது' - சுப்ரீம் கோர்ட்டு

தினத்தந்தி
|
27 Nov 2024 7:11 PM IST

மதமாற்றம் என்பது உண்மையான உத்வேகம் மற்றும் நம்பிக்கை மூலம் நடைபெற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு கடந்த 2023-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த செல்வராணி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தான் இந்து மதத்திற்கு உட்பட்ட வள்ளுவன் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றும், எஸ்.சி. இடஒதுக்கீட்டின் கீழ் கிளார்க் பணிக்காக விண்ணப்பித்தபோது தமிழக அரசு அதை நிராகரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தபோது, செல்வராணி கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து, ஞானஸ்நானம் பெற்றவர் என்பது உறுதி செய்யப்பட்டதால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் செல்வராணி மேல்முறையீடு செய்தார். அந்த மனு நீதிபதி பங்கஜ் மிட்டல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்தனர். மேலும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில், "மனுதாரர் இந்து மதத்திற்கு மாறியதாக எந்த ஆதாரமும் இல்லை. ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்போதே சாதி அடையாளத்தை இழந்து விடுகிறார். ஏனெனில் அந்த மதம் சாதி அமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

மதசார்பற்ற இந்திய நாட்டின் குடிமக்கள், எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் ஞானஸ்நானம் பெற்று, கிறிஸ்தவ நடைமுறைகளை ஏற்று வாழ்பவர், இடஒதுக்கீடு சலுகைகளுக்காக தன்னை இந்துவாக அடையாளம் காண முடியாது. இடஒதுக்கீடு பெறுவதற்காக மத அடையாளத்தை மாற்றுவதை ஏற்க முடியாது.

மதமாற்றம் என்பது உண்மையான உத்வேகம் மற்றும் நம்பிக்கை மூலம் நடைபெற வேண்டுமே தவிர, சட்டப்பூர்வ நன்மைகளை பெறுவதற்காக அல்ல. இடஒதுக்கீடு கொள்கையை தவறாக பயன்படுத்தும் செயல்கள், விளிம்புநிலை சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பு விதிகளின் நேர்மைக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகும்" என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்