< Back
தேசிய செய்திகள்
சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில்...தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா?
தேசிய செய்திகள்

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில்...தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா?

தினத்தந்தி
|
12 Jun 2024 12:10 PM IST

ஆந்திர முதல் மந்திரியாக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சரும் பா.ஜனதா மூத்த தலைவருமான அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விஜயவாடா,

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 175 இடங்களில் 135 தொகுதிகளில் தெலுங்குதேசம் வென்றது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு இன்று அம்மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார். விஜயவாடாவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பலரும் பங்கேற்று இருந்தனர்.

தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவரும் முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். விழா மேடையில் அமர்வதற்கு இவர்களுக்கு இருக்கை போடப்பட்டு இருந்தது. இதில் ரஜினிகாந்திற்கு பின்வரிசையில் ஓ.பன்னீர்செல்வம் அமரவைக்கப்பட்டார். முன்னதாக விழா மேடைக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன், மேடையில் அமர்ந்து இருந்த மூத்த தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி சென்றார்.

அந்த வகையில், அமித்ஷாவுக்கு வணக்கம் வைத்துவிட்டு தமிழிசை செல்ல முயன்ற போது, அவரை அழைத்த அமித்ஷா, தமிழிசையிடம் ஏதோ கூறினார். தமிழிசையும் அமித்ஷா பேசுவதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு ஆமோதிக்கும் வகையில் தலையை அசைத்து விட்டு சென்றார். பதவியேற்பு விழாவில் அமித்ஷா - தமிழிசை இடையே நடைபெற்ற இந்த உரையாடல் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. ஏனெனில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக பா.ஜனதா தலைமையை மறைமுகமாக தாக்கும் விதமாக சில கருத்துக்களை தமிழிசை பேசியிருந்தார். எனவே இது தொடர்பாக தமிழிசையை அழைத்து அமித்ஷா கண்டித்து இருக்கலாம் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.

மேலும் செய்திகள்