மணிப்பூரில் தொடரும் வன்முறை: கூடுதல் படையினரை அனுப்பிய மத்திய அரசு
|வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில் மணிப்பூருக்கு கூடுதலாக 2 ஆயிரம் படை வீரர்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
இம்பால்,
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்புப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அதேவேளை, கடந்த சில மாதங்களாக மோதல் சற்று தணிந்திருந்த நிலையில் தற்போது மோதல் மீண்டும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் பயங்கரவாதிகளால், இளம்பெண் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டார். வீடுகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
இதையடுத்து, அம்மாநிலத்தின் ஜிரிபாம் மாவட்டம் ஜக்குரதூர் நகரில் உள்ள காவல் நிலையம், மத்திய பாதுகாப்புப்படையினரின் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் குகி பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதனிடையே, இந்த என்கவுன்டர் சம்பவத்திற்கு மறுநாளான நேற்று ஜிரிபாம் மாவட்டத்தில் மெய்தி சமூகத்தை சேர்ந்த 3 பெண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 6 பேரை குகி பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர். மேலும், மெய்தி சமூகத்தை சேர்ந்த 2 ஆண்களையும் (வயது 76, 54) குகி பயங்கரவாதிகள் தீ வைத்து எரித்துக்கொன்றுள்ளனர். இந்த சம்பவங்களால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மணிப்பூருக்கு கூடுதலாக 2 ஆயிரம் படை வீரர்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது. மத்திய ஆயுத காவல் படையை சேர்ந்த 19 ஆயிரத்து 800 வீரர்கள் ஏற்கனவே மணிப்பூரில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 2 ஆயிரம் வீரர்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 1500 வீரர்கள், எல்லை பாதுகாப்புப்படையை சேர்ந்த 500 வீரர்கள் என மொத்தம் 2 ஆயிரம் வீரர்களை மத்திய அரசு மணிப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது.