பாசிச கொள்கையை மத்திய அரசு கடைபிடிக்கிறது - தி.மு.க. எம்.பி. ஆ.ராசா
|பட்டியலின மக்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டோரை பா.ஜ.க. அரசு ஒடுக்கப் பார்க்கிறது என்று தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மக்களவையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு பாசிச கொள்கையை கடைபிடித்து வருகிறது. இந்துக்கள் அல்லாதவர்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர் ஆகியோரை மத்திய அரசு குறிவைக்கிறது. இது தான் பாசிசம்; இது தான் இனவாதம். பட்டியலின மக்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டோரை பா.ஜ.க. அரசு ஒடுக்கப் பார்க்கிறது.
பா.ஜ.க.வின் நடவடிக்கைகள் சர்வாதிகாரமாக உள்ளது. பா.ஜ.க. அரசு நினைப்பதை அவர்களாக சொல்வது இல்லை. ஜனாதிபதி, சபாநாயகர் மூலமாக சொல்கின்றனர். பிரதமர் மோடி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பிரதமர் மோடி 8 முறை பரப்புரைக்கு வந்தும், திராவிட மண்ணில் பா.ஜ.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர்.
எமர்ஜென்சியை அமல்படுத்தியதற்காக இந்திரா காந்தி பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளார். இந்திரா காந்தி தெரிவித்த மன்னிப்பை மக்களும் ஏற்றுக் கொண்டு விட்டனர். அதன்பிறகு மீண்டும் அவரை மக்கள் பிரதமராக்கினர். இவ்வாறு அவர் கூறினார்.