
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மத்திய அரசு ஊழியர் அதிரடி கைது

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த மத்திய அரசு ஊழியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பெங்களூரு,
நமது நாட்டின் பாதுகாப்பு ரகசியங்கள் பற்றிய தகவல்களை, பாகிஸ்தான் நாட்டுக்கு ஒரு நபர் வழங்கி வருவதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.இ.எல். நிறுவனத்தில் இருந்து சில தகவல்கள் சென்றிருப்பது பற்றி அதிகாரிகளுக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது.
அந்த ஆதாரத்தின் பேரில் பெங்களூரு பி.இ.எல். நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியரை மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர் உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த தீப்ராஜ் சந்திரா என்று தெரிந்தது. இவர் பி.இ.எல். நிறுவனத்தில் திட்ட மேம்பாட்டு பிரிவில் பணியாற்றி வந்தது தெரிந்தது.
மேலும் யஷ்வந்தபுரம் அருகே மத்திகெரேயில் வாடகை வீட்டில் தங்கி இருந்து தீப்ராஜ் சந்திரா வேலைக்கு சென்று வந்ததுடன், அவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து இந்தியாவின் பாதுகாப்பு தகவல்களை பகிர்ந்ததும் தெரியவந்து உள்ளது. மத்திய உளவுத்துறை மற்றும் கர்நாடக மாநில உளவுப்பிரிவு போலீசார் இணைந்து தீப்ராஜ் சந்திராவை கைது செய்திருந்தார்கள். அவரிடம் இருந்து மடிக்கணினி, செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்த செல்போன், மடிக்கணினியில் இருந்து இந்திய ராணுவம், பாதுகாப்பு குறித்து பாகிஸ்தானுக்கு ஏதேனும் ரகசியங்களை தீப்ராஜ் சந்திரா அனுப்பி வைத்துள்ளாரா? என்பது பற்றி அதிகாரிகள் பரிசீலனை நடத்தி வருகின்றனர். மேலும் கைதான தீப்ராஜ் சந்திராவிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.