நீட் முறைகேடு தொடர்பாக குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ சோதனை
|நீட் முறைகேடு தொடர்பாக குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
காந்திநகர்,
மே மாதம் நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்திலும் நீட் முறைகேடு விவகாரம் எதிரொலித்தது.
இந்நிலையில், இது தொடர்பாக குஜாரத்தில் 7 இடங்களில் இன்று காலை முதல் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். ஆமதாபாத், கோத்ரா, ஆனந்த், கெடா ஆகிய 4 மாவட்டங்களில் சந்தேகப்பட கூடிய நபர்களின் வளாகங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. முறைகேடு தொடர்பாக ஏற்கனவே 2 பேரை சிபிஐ கைது செய்த நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, நேற்று ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியை சேர்ந்த பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இருவரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இது தொடர்பாக அதே மாவட்டத்தை சேர்ந்த மேலும் 5 நபர்களிடம் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.