சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் - நாடாளுமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
|இட ஒதுக்கீட்டில் 50 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அன்புமனி ராமதாஸ் கூறினார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மகிமைமிகு 75 ஆண்டுகள் என்ற தலைப்பில் பா.ம.க. எம்.பி. டாக்டர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "இடஒதுக்கீட்டில் 50 சதவீதம் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பது, இரண்டாவது கிரீமிலேயர், மூன்றாவது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, மேலும் பல பிரச்சினைகள் குறித்து பேச வேண்டியிருந்தாலும், நேரமின்மை காரணமாக இந்த விசயங்கள் குறித்து மட்டும் பேச விரும்புகிறேன். நாம் எதற்காக இடஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும்? அதற்காக இந்த நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு நிறைவேற்றினோமா, இல்லை.
1962-63 ஆம் ஆண்டில் பாலாஜி vs மைசூர் மாகாண அரசு குறித்த வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், பின்னர் 1993-ம் ஆண்டில் இந்திரா சகானி வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு அதை உறுதி செய்ததன் அடிப்படையிலும் இதை நாம் பயன்படுத்துகிறோம். இதில் நாடாளுமன்றத்துக்கு எந்த தொடர்பும் இல்லை.
இதே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை எதிர்த்துதொடரப்பட்ட வழக்கு சுப்ரீம்கோர்ட்டில்ல் விசாரணைக்கு வந்த போது, அதையும் சேர்த்து இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதம் கூடுதலாக இருந்தாலும் கூட, அதை சுப்ரீம்கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. காலம் காலமாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தான் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்குத் தான் மீண்டும் மீண்டும் பாகுபாடு இழைக்கப்படுகிறது.
இந்தியாவில் பட்டியலினத்தவரின் மக்கள் தொகை 15 சதவீதம், அவர்களுக்கு மத்திய அரசில் 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பழங்குடியினரின் மக்கள்தொகை 7.5 சதவீதம் , அவர்களுக்கும் அதே அளவு இடஒதுகுகீடு வழங்கப்படுகிறது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை என்னை பொறுத்தவரை 62 சதவீதம், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி 54 சதவீதம், ஆனால் அவர்களுக்கு மட்டும் ஏன் வெறும் 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு எதிராக மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் பாகுபாடு காட்டப்படுகிறது?
நாம் கிரிமிலேயர் என்ற தத்துவத்தை கடைபிடிக்க வேண்டுமா? அரசியலமைப்புச் சட்டத்தில் அது இருக்கிறதா? இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இதனால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மீண்டும் பாதிக்கப்படுகிறார்கள். பட்டியலினத்தவருக்கோ, பழங்குடியினருக்கோ கிரிமிலேயர் இல்லை, அவ்வாறு இருக்கும்போது ஓபிசி-க்கு மட்டும் ஏன் கிரிமிலேயர். மத்திய அரசுப் பணிகளில் கிரிமிலேயர் அல்லாத ஓபிசி-க்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும், அவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டதுபோக, மீதமுள்ள இடங்களை கிரிமிலேயர்களைக் கொண்டு நிரப்பும் வகையிலும் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் பழைய சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில், 95 ஆண்டுகளுக்கு முன் 1931-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் நிகர்நோக்கு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
இந்தியா விடுதலையடைந்து 78 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்த காலத்தில் ஏராளமான அரசுகள் வந்துவிட்டன. ஆனால் எந்த அரசும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை. ஆனால், அனைத்து வகையான இடஒதுக்கீடுகளும் சாதியின் அடிப்படையில்தான் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண நாம் முயற்சி செய்ய வேண்டும்.
இதற்காக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களில் சாதி என்ற ஒரே ஒரு பத்தியை சேர்க்க வேண்டியது மட்டும்தான்.1948-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டத்தில் நாம் திருத்தம் செய்ய வேண்டும். அப்போது ஓ.பி.சி. என்ற பிரிவு இல்லை. பட்டியலினத்தவர், பழங்குடியினர் மட்டும்தான் இருந்தனர். அதனால், இப்போது அதை செய்ய வேண்டும். அடித்தட்டு மக்கள், நலிவடைந்த பிரிவினர், தொழிலாளர்கள், விவசாயிகள், உழைப்பாளர்கள், பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள் முன்னேறினால் தான் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக முன்னேறும்" என்று அவர் கூறினார்.