செங்கோட்டைக்கு உரிமை கோரி முகலாய வம்சாவளியை சேர்ந்தவரின் மனைவி தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி
|செங்கோட்டைக்கு உரிமை கோரி முகலாய வம்சாவளியை சேர்ந்தவரின் மனைவி தாக்கல் செய்த வழக்கை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி ஐகோர்ட்டில் சுல்தானா பேகம் என்ற பெண் தாக்கல் செய்த மனுவில், "முகலாய பேரரசின் கடைசி மன்னர் பகதூர்ஷா சாபர், கடந்த 1857-ம் ஆண்டு ஆங்கிலேய அரசால் வீழ்த்தப்பட்டார். அவரது சொத்துகள் அனைத்தையும் கிழக்கிந்திய கம்பெனி சட்டவிரோதமாக எடுத்துக் கொண்டது.
இந்தயா சுதந்திரம் அடைந்த பிறகு, முகலாய பேரரசின் கடைசி வாரிசான மிர்சா முகமது பேதர் பக்திற்கு இந்திய உள்துறை அமைச்சகம் 1960-ம் ஆண்டு முதல் பென்சன் வழங்க தொடங்கியது. இந்நிலையில், 1980 மே 22-ந்தேதி மிர்சா முகமது பேதர் பக்த் காலமானதையடுத்து, அவரது மனைவி சுல்தானா பேகத்திற்கு 1980 ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் இந்திய அரசு பென்சன் வழங்கி வருகிறது. அந்த பென்சன் தொகை மிகவும் குறைவான அளவாக இருக்கிறது.
முகலாய வம்சாவளியை சேர்ந்தவரின் மனைவியான தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய டெல்லி செங்கோட்டையின் உரிமையை இந்திய அரசு தர மறுக்கிறது. இது அடிப்படை உரிமை மட்டுமின்றி அரசியலமைப்பு சட்ட உரிமை 300ஏ மற்றும் மனித உரிமையை மீறும் செயலாகும்" என்று கூறப்பட்டிருந்தது. எனவே, டெல்லி செங்கோட்டையின் உரிமையை தனக்கு வழங்க இந்திய அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, மிகவும் காலதாமதமாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டது. இதற்கு மனுதாரர் தரப்பில், அவர் கல்வி அறிவு பெறாதவர் என்பதால், அவரால் சரியான நேரத்தில் கோர்ட்டை நாட முடியவில்லை என்ற காரணம் கூறப்பட்டது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ள கோர்ட்டு மறுத்துவிட்டது. தொடர்ந்து அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர் டெல்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி துஷார் ராவ் கடேலா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தனர். காலதாமதத்திற்கு மனுதாரர் தரப்பில் கூறப்பட்ட காரணங்களை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.