பஸ் மீது கார் மோதி கோர விபத்து - மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலி
|பஸ் மீது கார் மோதிய விபத்தில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியை சேர்ந்த 11 மாணவர்கள் காரில் நேற்று இரவு கொச்சி சென்றுகொண்டிருந்தனர்.
இரவு 9 மணியளவில் காலர்கோடு அருகே உள்ள சாலையில் வேகமாக சென்ற கார் எதிரே வந்த அரசு பஸ் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த மருத்துவ மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சைக்கு செல்லும் வழியில் மேலும் 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த சிலரும் காயமடைந்தனர். அதேவேளை, காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் காரில் பயணித்த மருத்துவ மாணவர் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மழை பெய்துகொண்டிருந்தபோது காரை வேகமாக இயக்கியதும், மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த பஸ் மீது மோதியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.